முதல்வர் வெளிநாட்டு பயணத்தின் போது அவரது பொறுப்புகள் யாருக்கு?
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தின் போது அவரது பொறுப்புகள் யாருக்கு வழங்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி நிலையில், அவரது பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சரின் இந்த பயணத் திட்டத்திற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பொதுவாக பிரதமர் வெளிநாடு செல்லும் போது முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்புகளை தனக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சரிடம் ஒப்படைத்துச் செல்வார். அதேபோல, மாநில முதல்வர்களும் வெளிநாடு செல்லும் போது, மூத்த அமைச்சரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துச் செல்வார்கள்.
இந்நிலையில், முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணத்தின் போது தனது பொறுப்புகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமோ அல்லது மற்ற அமைச்சர்களிடமோ ஒப்படைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி வெளிநாட்டு பயணத்தின்போது தனது பொறுப்புகளை அவரே கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முக்கிய முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி வெளிநாட்டில் இருந்தபடியே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் முக்கியமான கோப்புகளை முதல்வர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்து கையெழுத்திட்டு பேக்ஸ் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.