அதிகார வரம்பில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை இன்று பிறப்பிக்கிறது.
New Delhi: டெல்லி அரசில் யாருக்கு உச்சபட்ச அதிகாரம் என்பது குறித்த முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பிக்க வாய்ப்புள்ளது. டெல்லியில் மத்திய அரசின் துணை நிலை ஆளுநர் பெரும்பாலான முடிவுகளை எடுத்தும், முக்கிய பொறுப்புகளுக்கு அதிகாரிகளை நியமித்தும் வந்ததால் முதல்வர் மற்றும் துணை நிலை ஆளுநருக்கு இடையே அதிகார பிரச்னை ஏற்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் கட்சி டெல்லியில் ஆட்சி செய்தால் இதுபோன்ற சிக்கல்கள் அதிகம் எழ வாய்ப்பில்லை. ஆனால் தற்போது மத்தியில் பாஜகவும், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியிலும் ஆட்சி செய்து வருவதால் பிரச்னை அவ்வப்போது வெடிக்கிறது.
டெல்லி அமைச்சரவை ஒரு முடிவை எடுக்கும்போது அதனை துணை நிலை கவர்னர் நிறைவேற்ற தாமதம் செய்வதாகவும், அல்லது ஒத்துழைக்க மறுப்பதாகவும் ஆம் ஆத்மி அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதுபோன்ற விவகாரம் தொடர்ந்ததால், பிரச்னை டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு சென்றது.
அதில் கடந்த 2016 ஆகஸ்டில் அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநர்தான் டெல்லி அரசு நிர்வாகத்தின் தலைவராக இருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இது ஆம் ஆத்மி அரசுக்கு பின்னடைவை அளித்ததால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது அவசியம். மக்கள் தேர்ந்தெடுத்த அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. சட்டம் ஒழுங்கு, நிலம், போலீஸ் ஆகியவற்றை தவிர்த்து மற்ற துறைகளில் முடிவுகள் எடுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உண்டு. அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் மதிப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த தீர்ப்பு மிக முக்கியமானது என்பதால் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதுகுறித்து நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.