This Article is From Aug 10, 2020

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

திமுக ஒரு குடும்ப கட்சி. அங்கு வாரிசு அரசியல் நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கமளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி கண்மாய் பகுதியில் ரூ.90 லட்சம் மதிப்பில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று நேரில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, மதுரை வைகையாற்றில் ரூ.17 கோடி செலவில் கொடிமங்கலம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு விவசாயிகள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். 

மேலும், ரூ.1428 கோடி ஒதுக்கி நீர் நிலைகள் மேம்படுத்தப்படுகிறது. கடந்தாண்டு மழையளவு சீராக இருந்ததால் மதுரை மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்றார்.

தொடர்ந்து, பேசிய அவர் திமுக ஒரு குடும்ப கட்சி. அங்கு வாரிசு அரசியல் நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. திறமையில்லாத மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக உள்ளார்.  திமுகவினரிடையே ஒற்றுமையில்லை. 

எங்களது கருத்தை ஏற்று அதிமுகவிற்கு திமுகவினர் யார் வந்தாலும் வரவேற்போம். ஏன், பாஜகவின் நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு வந்தாலும்கூட வரவேற்போம். கு.க.செல்வம் திமுகவிலிருந்து பாஜவுக்கு சென்றது அவரது விருப்பம் என்றார்.

சசிகலா பற்றி எங்களுக்கு கவலையில்லை. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அதிமுக மிகப்பெரிய வலுப்பெறும். தேர்தலுக்காக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நன்றாக செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக புயல் வேகத்தில் பணியாற்றி வருகிறது என்றார்.

தொடர்ந்து, அவரிடம் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துகிறார்கள்.

அதிமுக எப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் நடைபெறும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி யாரை தலைவராக தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்று அவர் தெரிவித்துள்ளார். 

.