மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். மாலை பதவியேற்க உள்ள நிலையில், மோடி அமைச்சரவையில் யார் யார் பங்கேற்கிறார், யார் புறக்கணிக்கப்படுகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதில், தமிழகத்தில் அதிமுகவில் அமைச்சரவையில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. ஒரு தரப்பு அவரை முன்நிறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், மற்றொரு தரப்பு தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ஓ.ரவிந்தரநாத்தை தேர்வு செய்ய வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது,
அதிமுகவில் இருவருக்கு அமைச்சர் பதவி, என்ற அனுமானத்திற்கு பதிலளிக்க முடியாது. மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். பதவி கேட்டு நாங்கள் யாரையும் அணுகுவது இல்லை. அமைச்சர் பதவிக்காக அதிமுகவில் இருதரப்பு போட்டி என்பது கற்பனையே. எங்களை பொறுத்தவரை பதவி என்பது 2ஆம் பட்சம் தான் என்று அவர் கூறினார்.
அரசு அமைவதற்கு அழைப்பு விடுத்தால், பங்கேற்பதில் என்ன இருக்கிறது? மோடி பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது சந்தர்ப்பவாதம். நேரத்திற்கு தகுந்தாற்போல ஆதாயம் தேடி பறக்கும் கொக்கை போன்றது திமுக என்றார்.
அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர திமுக நினைப்பது குறித்த கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்று அவர்கள் பாணியிலே நானும் கூறுகிறேன் என்றார்.
அமமுகவுக்கு ஒரு சில வாக்குச்சாவடிகளில் பூஜ்யம் என வந்ததற்கு யாரும் வாக்களிக்காததே காரணமாக இருக்க முடியும். எந்த சாதி என்று செய்தியாளரிடம் கிருஷ்ணசாமி கேட்டது தவறு. எனக்கு தெரிந்தது ஆண் சாதி, பெண் சாதிதான். வேறு அர்த்தத்தில் கேட்டிருந்தால் அது தவறுதான் என்று அவர் கூறினார்.