தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் 1-ம்தேதி தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்
தமிழக பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், பாஜகவின் மூத்த நிர்வாகியான து.குப்புராமு தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் 1-ம்தேதி தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பின் தமிழக பாஜகவுக்கு தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. தலைவர் இல்லாமலேயே பாஜக உள்ளாட்சி தேர்தலையும் சந்தித்தது.
இதனிடையே தலைவர் பதவிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் அடிபட்டு வந்தது. இந்த நிலையில் பாஜக தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து நிர்வாகிகளிடம் மேலிட பொறுப்பாளர்கள் கருத்து கேட்கும் கூட்டம் இன்று நடந்தது.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மேலிட பிரதிநிதிகள் நரசிம்மராவ் சிவப்பிரகாஷ் உள்பட 3 பேர் குழு கருத்துக்களை கேட்டனர். மாநில நிர்வாகிகள் இளைஞர் அணி மகளிர் அணி, விவசாய அணி உள்ளிட்ட துணை அமைப்புகளைச் சேர்ந்த 42 பேரிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு நிர்வாகியையும் தனித்தனியாக அழைத்து கருத்து கேட்டனர்.
இதில் தமிழக பாஜக தலைவராக குப்புராமு தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் பாஜக துணைத் தலைவராகவும், விஷ்வ இந்து பரிஷத் மாநில தலைவராகவும் பதவி வகித்தவர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குப்புராமு, 1986-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை பட்டினம்காத்தான் முதல் நிலை ஊராட்சி ஒன்றிய தலைவராக 3 முறை பதவி வகித்துள்ளார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார்.
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன், முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது குப்புராமு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும், தமிழக பாஜக தலைவர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.