மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது சொத்துகளுக்கு யாரையாவது வாரிசுதாரராக நியமித்துள்ளாரா? அல்லது உயில் ஏதும் எழுதி வைத்திருக்கிறாரா? என்பது குறித்த விவரத்தை அளிக்குமாறு வருமான வரித்துறையை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்து வரி தொடர்பான வழக்கை வருமான வரித்துறை தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது. 1997-98 ம் ஆண்டின்போது வருமான வரித்துறை மேற்கொண்ட சொத்து மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.இதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை தீர்ப்பாயம் கடந்த 2016, செப்டெம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேல் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் கே. கல்யாண சுந்தரம் ஆகியோரது முன்னிலையில் இன்று (திங்கள் கிழமை) நடைபெற்றது.
அப்போது ஜெயலலிதா தனது சொத்துகளுக்கு சட்டப்பூர்வ வாரிசாக யாரையாவது நியமித்துள்ளாரா? அல்லது தனது சொத்து தொடர்பாக உயில் ஏதும் எழுதி வைத்துள்ளாரா என்று கேள்வி எழுப்பினர். அதுபற்றிய விவரங்களை அளிக்குமாறு கூறி வழக்கை வரும் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)