This Article is From Nov 25, 2018

கவுரி லங்கேஷை கொன்றது யார்? பரபரப்பான தகவல்களை வெளியிட்டது விசாரணைக்குழு

கர்நாடகாவில் பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல்களை விசாரணைக்குழு வெளியிட்டிருக்கிறது.

கவுரி லங்கேஷை கொன்றது யார்? பரபரப்பான தகவல்களை வெளியிட்டது விசாரணைக்குழு

கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம்தேதி கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார்.

Bengaluru:

பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷை சனாதன் சாஸ்தா என்ற கொலைக்கும்பல் கொன்றதாக சிறப்பு விசாரணைக்குழு பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

சமூக ஆர்வலரான கவுரி லங்கேஷின் எழுத்துகள் இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக இருப்பதாக பேசப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம்தேதி கவுரி லங்கேஷ் அவரது இல்லத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

நீண்ட போராட்டம், நெருக்கடிகளை தொடர்ந்து அவரது கொலை வழக்கு தொடர்பாக போலீசார் 8 மாதங்களுக்கு பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதன் பின்னர் சிறப்பு விசாரணைக்குழு ஏற்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில் சிறப்பு விசாரணைக்குழுவினர் அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது -
கவுரி லங்கேஷை சனாதன் சான்ஸ்தா என்ற வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள்தான் கொலை செய்திருக்கின்றனர்.

இந்த அமைப்பு கடந்த 2010-11-ல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் தலைவர் டாக்டர். வீரேந்திர தவாடே. இவர்தான் அமைப்பில் இருப்பவர்களுக்கு நிதியுதவி செய்து வந்திருக்கிறார்.

இவர்கள் ஒரு கொலைக் கும்பலைப் போன்று செயல்பட்டு, ஒரு குறிப்பிட்ட கருத்தியலுக்கு எதிரானவர்களை குறி வைத்துள்ளனர். இந்த கும்பலுக்கு சத்ரிய தர்ம சாத்னா என்ற புத்தகம் வழங்கப்படும். அதில் உள்ள கருத்துக்களை இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும்.

முன்னதாக கன்னட எழுத்தாளர் கல்புர்கி, மகாராஷ்டிராவில் கோவிந்த் பன்சாரே ஆகியோர் கொல்லப்பட்டனர். அவர்களை கொன்ற அதே ஆயுதங்கள்தான் கவுரி லங்கேஷை கொல்லும்போதும் கொலைகாரர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

சான்ஸ்தா அமைப்புக்கு ஆட்களை எடுக்கும் விதம் மிகவும் ரகசியமானது. புனை பெயர்களை வைத்துதான் அமைப்பில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளப்படுகின்றனர். அவர்கள் வைத்திருக்கும் போன்களை ட்ரேஸ் செய்வது கடினம். ஆயிரக்கணக்கான பைக்குகளை ட்ரேஸ் செய்த பின்னர்தான் இந்த கும்பலை கண்டுபிடிக்க முடிந்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்கள் மீதான குற்றச்சாட்டை சனாதன் சான்ஸ்தா அமைப்பு மறுத்திருக்கிறது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 

.