கொரோனா: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சோதனையை நிறுத்த உலக சுகாதார மையம் முடிவு!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேரியா தடுப்பு மருந்ததான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்தாக கொடுப்பதையும், அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வீடியோ கன்பரன்சிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார மையம் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறும்போது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்துவதால் அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்ததாக கடந்த வாரம் லான்செட் பதிப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸூக்கு பல சாத்தியமான சிகிச்சைகளை பரிசோதிக்க பல நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சோதித்து வந்த நிலையில் நிர்வாக குழு, அந்த மருந்தைப் பயன்படுத்த முன்னெச்சரிக்கையாக சோதனைகளை நிறுத்தியது என்று டெட்ரோஸ் கூறினார்.
இந்த முடிவுகளுக்கான புள்ளி விவரங்களை உலக சுகாதார மையத்தின் டேட்டா பாதுகாப்பு சோதனை மையம் சோதனை செய்து வருகிறது. அதில் முடிவுகள் வந்த பின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்து அறிவிப்போம். அதுவரை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேரியாவை தடுக்க உதவும் இந்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை கொரோனா தாக்குதலுக்கு தடுப்பாக தான் உட்கொண்டு வருவதாக கூறியிருந்தார். அதேபோல், இந்த மருந்துகளை இந்தியாவிடம் அதிகளவில் வாங்கியிருந்தார்.
இதேபோல், பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சரும் கடந்த வாரம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் மலேரியா எதிர்ப்பு குளோரோகுயின், உள்ளிட்ட மருந்துகளை கொரோனா பாதிப்பு லேசாக உள்ளவர்களுக்கு கொடுக்கலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த இரண்டு மருந்துகளும் தீவிரமான பக்க விளைவுகளை உருவாக்கக்கூடும் என்று லான்செட் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எந்த மருந்தும் பயனளிக்கவில்லை என்று லான்செட் ஆய்வின்படி, நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் உள்ள 96,000 நோயாளிகளின் சோதித்துப் பார்த்துள்ளது.
எனினும், அந்த இரண்டு மருந்துகளும், மலேரியா நோயாளிகளுக்கு பயன்படுத்துவது பாதுகாப்பானது தான் என்று டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.