காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!
New Delhi: மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். மாலை பதவியேற்க உள்ள நிலையில், மோடி அமைச்சரவையில் யார் யார் பங்கேற்கிறார், யார் புறக்கணிக்கப்படுகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடந்த 24மணி நேரமாக பல்வேறு கட்ட ஆலசோனைக்கு பின்னர் அமைச்சர்கள் பட்டியலை பிரதமர் மோடியும் - பாஜக தலைவர் அமித்ஷாவும் இறுதி செய்துள்ளனர். தொடர்ந்து, இன்று காலையும் பிரதமர் மோடி இல்லத்தில் வைத்து மீண்டும் ஆலோசனை மேற்கொண்டனர்.
மோடி - அமித்ஷாவிடமிருந்து ஃபோனில் அழைப்பு வந்தால் மட்டுமே சம்பந்தப்பட்டவர் அமைச்சராக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களாக யார் யாரெல்லாம் பொறுப்பேற்க உள்ளனர் என்ற தகவல் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மோடியின் அமைச்சரவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இடம்பெறுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 'என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காவும், எனது உடல்நலனுக்காகவும் என்னை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். புதிய அரசில் எனக்கு பொறுப்பு அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய அமைச்சரவையில், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், சுரேஷ் பிரபு, ஸ்மிருதி இராணி, ரவிசங்கர பிரசாத், வி.கே.சிங் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் இடம்பெறுவர் என்று தெரிகிறது.
இதில், ஸ்மிருதி இராணிக்கு முக்கிய அமைச்சரவை கிடைக்கும் என கூறப்படுகிறது. அமேதியில் ராகுலின் சொந்த தொகுதியில் அவரை தோற்கடித்த காரணத்திற்காக அவர் நன்கு கவனிக்கப்படுவார் என தெரிகிறது.
இதேபோல், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 2 கேபினட் பதவிகள் கேட்டு அமித்ஷாவிடம் வலியுறுத்தி வருகிறார். இதேபோல், தமிழகத்தில் அதிமுகவும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. இதில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ள வைத்திலிங்கம் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ஓ.ரவிந்தரநாத்தை தேர்வு செய்ய வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ராஜ்காட் சென்ற பிரதமர் மோடி மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். இதில் மோடியுடன் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.