This Article is From Feb 17, 2019

காங்கிரஸா? பாஜகவா? யாருக்கு ஆதரவு... ரஜினி சூசகம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினி அறிவித்தாலும், யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸா? பாஜகவா? யாருக்கு ஆதரவு... ரஜினி சூசகம்

சட்டமன்ற தேர்தல்தான் தங்களது இலக்கு என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • தண்ணீர் பிரச்னையை தீர்ப்பவர்களை ஆதரியுங்கள் என்கிறார் ரஜினி
  • நாடாளுமன்ற தேர்தலை ரஜினி தவிர்த்துள்ளார்
  • சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்கிறார் ரஜினி

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ரஜினிகாந்த் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுன்ற தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக ரஜினிகாந்த் தெரிவித்து விட்டார். ரஜினி மக்கள் மன்றத்தின் கொடி, தனது படங்கள் எதையும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு ரசிகர்கள் பயன்படுத்தக் கூடாது என்பது ரஜினியின் உத்தரவு.

இதேபோன்று நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்பதை ரஜினிகாந்த் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘' தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில் மத்தியில் நிலையான வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

காங்கிரஸா?

தண்ணீர் பிரச்னை என்று பார்க்கும்போது காவிரி விவகாரம்தான் முக்கிய பிரச்னையாக உள்ளது. தடுப்பணை கட்டி காவிரி நீரை தக்க வைத்துக் கொள்வதில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கட்சி தீவிரம் காட்டி வருகிறது. மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு காவிரி விவகாரத்தில் இன்னும் தீவிரமாக செயல்படும் என்றே எதிர்பார்க்கலாம்.

பாஜக?

ரஜினியின் அறிக்கைப்படி பார்க்கும்போது, காங்கிரஸை தவிர்த்து பார்த்தாலும், மேகதாது தடுப்பணை அமைக்கும் விவகாரத்தில் கர்நாடக எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. காவிரி பிரச்னைய மத்திய பாஜக அரசு சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

மத்தியில் ஆட்சி அமைப்பவர்களுக்கே வாக்களியுங்கள் என்று கூறுவதால் காங்கிரஸ் அல்லது பாஜக கூட்டணியை ஆதரியுங்கள் என்று ரஜினி கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம். இதைத் தவிர்த்து மற்ற எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்க வேண்டாம் என்றும் நாம் கருதலாம்.

மொத்தத்தில் 3 பாராவில் அறிக்கை வெளியிட்டு எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் நழுவியுள்ளார் ரஜினிகாந்த்.

 

மேலும் படிக்க ‘'நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என ரஜினி அறிவிப்பு'' – ரசிகர்கள் அதிர்ச்சி
 

.