This Article is From Mar 24, 2020

144 எதற்கு? ஊரடங்கு பிறப்பிக்காதது ஏன்? தமிழக அரசை எச்சரிக்கும் ராமதாஸ்!

இந்தியாவில் 30 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆணைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 30 மணிநேரம் இடைவெளி விடுத்து இன்று மாலை 6 மணிக்குதான் நடைமுறைக்கு வருகிறது.

144 எதற்கு? ஊரடங்கு பிறப்பிக்காதது ஏன்? தமிழக அரசை எச்சரிக்கும் ராமதாஸ்!

140 நாடுகளில், பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது - ராமதாஸ்

ஹைலைட்ஸ்

  • 144 எதற்கு? தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்காதது ஏன்?
  • ஊரடங்கு ஆணை தான் பயனளிக்கும்
  • 144 தடை என்பது ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 5 பேர் வரை கூட அனுமதிக்கிறது

உலகம் முழுவதும் 140 நாடுகளில், பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்காதது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். 

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன. சர்வதேச விமானங்கள், பயணிகள் ரயில்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவைகள் மார்ச்.31ம் தேதி வரை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு உள்நாட்டு விமானங்களுக்கும் தடை விதித்து கடுமையாக கட்டுபாடுகளை அமல்படுத்தியது. அத்தோடு, இந்த கட்டுபாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. 

தொடர்ந்து, தமிழகத்திலும் இன்று மாலை 6 மணி முதல் அனைத்து மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்றும், மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவானது இம்மாதம் 31-ம்தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்காதது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ஆனாலும், நோய்த்தடுப்புக்கு அடிப்படையான சமூக இடைவெளியை உறுதி செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மனநிறைவு அளிக்கவில்லை.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் தும்மும்போதும், இருமும்போதும் அவருக்கு 3 அடி சுற்றளவில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும். சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் இதை தடுக்க வேண்டும். இதற்கான ஒரே தீர்வு ஊரடங்கைக் கடைப்பிடிப்பது தான்.

உலக சுகாதார நிறுவனமும் இதைத் தான் வலியுறுத்துகிறது. இதை மதித்து உலகம் முழுவதும் 140 நாடுகளில், பாதிக்கப்பட்ட பகுதிகளில், ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் மக்கள் வீதிகளுக்கு வருவதை தடுக்க ராணுவத்தினர் ரோந்து வருகின்றனர். இதுதான் சிறந்த சமூக இடைவெளி ஆகும்.

தமிழ்நாட்டிலும் இதே அளவு வலிமையான சமூக இடைவெளியை உருவாக்க வேண்டும்; அதன்மூலம் நோய்ப்பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு தான் பிறப்பிக்கப்படும் என்று தமிழக முதல்வர் நேற்று மாலை அறிவித்த நிலையில், உடனடியாக அவரை தொலைபேசியில் நான் தொடர்பு கொண்டு, 114 தடையால் எதிர்பார்த்த பயன் கிடைக்காது என்றும், ஊரடங்கு ஆணை தான் பயனளிக்கும் என்றும் விரிவாக விளக்கினேன்.

ஆனால், அதன்பிறகும் தமிழகத்தில் 144 தடை ஆணை தான் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அத்தியாவசியத் தேவைகள் என்ற பெயரில் தேநீர் கடைகள் வரை ஏராளமான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 

அதுமட்டுமின்றி, இந்தியாவில் 30 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆணைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் 30 மணிநேரம் இடைவெளி விடுத்து இன்று மாலை 6 மணிக்குதான் நடைமுறைக்கு வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு தான் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஏதோ விடுமுறைக்கு வீடுகளுக்கு செல்வது போல பேருந்துகளில் கூட்டம், கூட்டமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

144 தடை என்பது ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 5 பேர் வரை கூட அனுமதிக்கிறது. 5 பேருக்கு மேல் கூடினால் கூட, அவர்களிடம் ஆயுதம் இல்லாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. 144 தடை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருப்பதால், 5 அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குழுவோ, குடும்பமோ தமிழகத்தில் எங்கும் சுதந்திரமாக சுற்றி வர முடியும். இதுவா கொரோனா பரவலை தடுக்கும்?

பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு செயல்பட்டிருக்க வேண்டும்; செயல்பட வேண்டும். ஆனால், தமிழக அரசின் சில செயல்பாடுகள் அவ்வாறு அமையாதது நல்வாய்ப்புக் கேடானது ஆகும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

.