“இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்து வந்தேன்"- தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, ராணுவ உடையில் வரும் ஒரு வீடியோ தற்பொது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 3 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தோனி, பிராந்திய ராணுவத்தின் பாரசூட் பிரிவில் கவுரவ லெஃப்டெனென்ட் கர்னலாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் தனது படைப் பிரிவுடன் பயிற்சி செய்ய அவர் இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத்தினம் அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி கொடுக்கப்படவே, தோனி தற்போது தனது படைப் பிரிவுடன் பயிற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் மகிந்திரா வாகன தயாரிப்பு நிறுவனத்தின் சி.இ.ஓ ஆனந்த் மகிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் வீடியோவைப் பகிர்ந்து, “3 ஆண்டுகள் பழமையான வீடியோ என்னிடம் இருந்து வருகிறது. தோனி, நீங்கள் இந்த மிலிட்டரி உடையில் மிடுக்குடன் இருக்கிறீர்கள். அதுவும் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாகனத்தினாலும் நீங்கள் இன்னும் கச்சிதமாக ஜொலிக்கிறீர்கள்” என்று ட்வீட்டினார். அந்த வீடியோவில் தோனி, மகிந்திரா நிறுவனத்தின் XUV 500 காரில் வந்து இறங்குவது குறிப்பிடத்தக்கது. இதையொட்டித்தான் ஆனந்த் மகிந்திரா, இந்த ட்வீட்டைப் பகிர்ந்தார். அவர் இப்படியொரு வீடியோவை ஷேர் செய்ய, தோனி ரசிகர்கள் அதை ட்ரெண்டாக்கி விட்டனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு, இந்திய ராணுவத்தின் ஆக்ரா பயிற்சி முகாமில், பாராசூட் பிரிவில் சேர்வதற்கான பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார் தோனி. அதைத் தொடர்ந்துதான் அவருக்கு கவுரவப் பதவி வழங்கப்பட்டது.
“இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்து வந்தேன். ஒரு குழந்தையாக இது என்னுடைய நெடுநாள் கனவாக இருந்து வந்தது. இப்போது நான் ராணுவத்தில் சேர்ந்துள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது” என்று கவரவப் பதவி கிடைத்த பின்னர் சிலாகித்தார் தோனி.
Click for more
trending news