Kamal Haasan on Citizenship Bill - "இலங்கையைச் சேர்ந்த தமிழர்களையும் முஸ்லிம்களையும் சேர்க்காததன் காரணம் என்னவோ?”
Citizenship Bill- கிட்டத்தட்ட 12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு குடியுரிமை திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று முன்தினம் ஒப்புதல் பெற்றது. இந்நிலையில் இன்று மசோதா, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மசோதாவுக்கு அரசியல் தளத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன. தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் (Kamal Haasan), இந்த மசோதா குறித்த தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குடியுரிமை திருத்த மசோதாவில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் என்கிறது.
இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் குடியுரிமை மசோதா குறித்து கமல், “இனப் படுகொலைக்கு ஆளான தமிழர்களையும் முஸ்லிம்களையும் குடியுரிமை திருத்த மசோதாவில் இருந்து விலக்கி வைத்ததற்குக் காரணம் என்ன? அது வாக்குகளை உருவாக்கும் விஷயமாக இல்லாமல் உண்மையான மசோதாவாக இருந்தால், இலங்கையைச் சேர்ந்த தமிழர்களையும் முஸ்லிம்களையும் சேர்க்காததன் காரணம் என்னவோ?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
லோக்சபாவில் இந்த மசோதா ஒப்புதல் பெற்ற சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி, “திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா, 2019, லோக்சபாவில் விவாதங்களுக்குப் பிறகு ஒப்புதல் பெற்றது மகிழ்ச்சி. இந்த மசோதாவுக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சிகளுக்கும் நன்றி. இந்தியா பல ஆண்டுகளாக நம்பும் மனித மாண்புகளின் அடிப்படையிலேயே இந்த மசோதா இருக்கிறது,” என்று ட்வீட்டினார்.
முன்னதாக மசோதா குறித்து அமித்ஷா பேசுகையில், “நாட்டில் இருக்கும் முஸ்லிம்களோ, வடகிழக்கைச் சேர்ந்த நபர்களோ இந்த மசோதா குறித்து கவலையடைய வேண்டாம். காரணம், அண்டை நாடுகளில் இருக்கும் சிறுபான்மையின அகதிகளுக்காகத்தான் இது வரையறுக்கப்பட்டுள்ளது. அதைப் போன்ற பல கோடி நபர்கள், வீடு, கல்வி மற்றும் சுகாதாரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்,” என்று கூறினார்.
குடியுரிமை மசோதா, முஸ்லிம்களுக்கு எதிரானது என்கின்ற வாதத்தை நிராகரித்த அமித்ஷா, “பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்படாததற்குக் காரணம், அவர்கள் அந்த நாட்டில் சிறுபான்மையினர் கிடையாது என்பதால்தான்,” என்று விளக்கமளித்தார்.
மத்திய அரசு இந்தியாவை ஒரு ‘இந்து பாகிஸ்தானாக' மாற்ற முயல்கிறது என்ற கூற்றையும் மறுத்த அமித்ஷா, “அது மிகவும் தவறான வாதம். இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள் தொகை 9.8 சதவிகிதத்தில் இருந்து 14.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால், பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 23 சதவிகித்தத்தில் இருந்து 3.7 சதவிகிதமாக குறைந்துள்ளது,” என்று தெரிவித்தார்.