This Article is From Sep 02, 2018

மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் வழங்குவது பற்றி அரசு யோசிக்காதது ஏன்?: உயர்நீதிமன்றம்

மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது

மீனவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் வழங்குவது பற்றி அரசு யோசிக்காதது ஏன்?: உயர்நீதிமன்றம்

இந்திய மீனவர்கள் கடல் எல்லையைக் கடந்து இலங்கைக் கடற்பகுதிக்குள் நுழைவைதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் பற்றி உறுதிமொழி ஆவணம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் “மீனவர்கள் தங்கள் கடல் எல்லையை அறிந்துகொண்டு மீன்பிடிக்க உதவும் புவிநிலைக்காட்டி (GPS) கருவிகளை அவர்களுக்கு வழங்கும் யோசனை ஏன் மத்திய அரசுக்கு எழவில்லை” என்றும் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஃபிசர்மேன் கேர் (Fisherman Care) என்னும் அரசுசாரா அமைப்பு தொடர்ந்த வழக்கில் மனுதாரர், 1974 இல் இருநாடுகளுக்கிடையே கையெழுத்தான அமைதி உடன்படிக்கையினை இலங்கை மீறிவிட்டதாகவும் இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கைக் கடற்படை நடத்தும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேற்கொண்டு விசாரணைக்காக இவ்வழக்கை இருவாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்படக் காரணமான 1974, 1976ஆம் ஆண்டு ஒப்பந்தங்களே இந்திய மீனவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் காரணம். ஆகவே அவற்றை இரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் 2008இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.