நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
காங்கிரஸ் மற்றும் திமுக கொண்டு வந்த மற்ற திட்டங்களை திரும்ப பெரும் பாஜக அரசு நீட் தேர்வை ஏன் திரும்ப பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வு தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில், இன்றைய விசாரணையின் போது, நீட் பயிற்சி மையங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 3,081 மாணவர்களில் 48 மாணவர்கள் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல நீட் பயிற்சி மையங்களில் 2 முதல் 5 லட்சம் வரை கட்டணம் தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் தனியார் பயிற்சி மையங்களில் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதால் ஏழை மாணவர்கள் எவ்வாறு பயில இயலும் என கேள்வி எழுப்பினார்கள்.
மேலும், பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவ படிப்பு சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில் நீட் தேர்வு பயிற்சிக்காக அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்குவதாகவும், ஆசிரியர்களுக்கு இதை விட அதிகமாக வழங்குவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திரும்ப பெற்று வரும் மத்திய அரசு நீட் தேர்வை மட்டும் ஏன் திரும்ப பெறவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை நவ.7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.