கோவை சோமையனூரில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை கடந்த சில தினங்களாக அங்கலக்குறிச்சி, தேவனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. சின்னத்தம்பி யானையை வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னதம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் எனும் நிலை எழுந்தது. இதனை பலரும் கண்டித்தனர். இதனால் சின்னதம்பியை கும்கி யானையாக மாற்ற வேண்டும் என்ற முடிவு கைவிடப்பட்டது. எனினும், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் விடுவதில் சிக்கல் உள்ளது. எனவே, அதை முகாமுக்குப் பிடித்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று நீதிமன்றத்தில் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
சின்னதம்பியை வனத்துக்குள் விரட்ட பொள்ளாச்சியில் இருந்து கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. காட்டு யானைகளை விரட்டுவதில் அனுபவம் வாய்ந்த கும்கி கலீமும், மாரியப்பனும் சின்னதம்பி சுற்றித்திரியும் இடத்தின் அருகே தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.
அப்போது காட்டிற்குள் இருந்து வெளியே வந்த சின்னதம்பி யானையானது இரண்டு யானைகளுக்கும் எதிரே கோபமாக நின்றது.கோபமாக இருந்த சின்னத்தம்பி யானையை பார்த்து பயந்த கும்கி மாரியப்பன் பின்வாங்கியது.
இதைத்தொடர்ந்து, கும்கி மாரியப்பன் அங்கிருந்து திரும்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பின், இன்று சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி சுயம்பு வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி கலீமும், சுயம்புவும் சின்னத்தம்பியை காட்டிற்குள் விரட்டுமா என பெரும் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக நாளை விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, நீதிபதிகள் சில கேள்விகள் எழுப்பினர். அதாவது, சின்னத்தம்பி யானையை இயற்கை உணவுகள் கொடுத்து ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சின்னத்தம்பியின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமையாகும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.