ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் ராணுவத்தால் நள்ளிரவில் 12.50 மணி அளவில் ஒப்படைக்கப்பட்டதாக உ.பி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
Bulandshahr, Uttar Pradesh: உத்தர பிரதேசம் காவல் ஆய்வாளர் ஷுபோத் குமார் சிங் கொலை விவகாரத்தில் சந்தேகிக்கப்படும் நபரான ராணுவ வீரர் உத்தர பிரதேச காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீதேந்திர மாலிக் என்ற அந்த ராணுவ வீரரை, கடந்த 36 மணி நேரமாக போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து ராணுவத்தால் ஜீதேந்தர் உ.பி. காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதுகுறித்து மூத்த அதிகாரியான அபிஷேக் சிங் கூறும்போது, ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் 12.50 மணி அளவில் ராணுவத்தால் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து அவர் புலந்தஷகர் அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் ஸ்ரீநகரில் பணியில் இருந்து வருகிறார். இவர் 15 நாள் விடுமுறை காரணமாக தனது சொந்த ஊரான புலந்தஷகர் வந்திருந்தார், அந்த நேரத்தில் பசுகாவலர்களால் நடத்தப்பட்ட வன்முறையில் ஜீதேந்தரும் ஈடுபட்டது பல வீடியோக்கள் மூலம் தெரியவந்தது. மேலும் வன்முறையில் காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த அன்று மாலையே ஜீதேந்தர் தனது பணிக்கு திரும்பியுள்ளார்.
மேலும், ராணுவ வீரர் ஜீதேந்திர மாலிக் தான் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டாரா என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் என்டிடிவியிடம் கூறும்போது, ஜீதேந்திர மாலிக் தான் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டார் என்பது விரைவில் தெரியவரும் என்றார்.
இதுதொடர்பாக வன்முறை நடந்த எடுக்கப்பட்ட வீடியோவில், அவனுடைய துப்பாக்கியை எடு என்ற ஒரு குரல் பின்னால் கேட்கிறது. இதேபோல், புலந்தஷகர் காவல் நிலையம் அருகே நடந்த வன்முறையில் ஜீதேந்தர் இருப்பது பல வீடியோக்களில் பதிவாகி உள்ளது.
இதனிடையே, சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்த நிலையில், நேற்று அந்த மாவட்டத்தில் உள்ள உயர்போலீஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூத்த காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண பகதூர் சிங் லக்னோவிற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சிதாப்பூரை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் செளத்ரி நியமிக்கப்பட்டுள்ளளார்.
இதேபோல், மேலும் இரண்டு காவலர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.