அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டன.
Kolkata: அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டன. அவர்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸுக்கு கூட்டணியில் கல்தா கொடுத்துவிட்டது அகிலேஷ்-மாயாவதி காம்போ. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து அகிலேஷ் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
கொல்கத்தாவில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அகிலேஷ், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். தொடக்கத்தில், “நான் காங்கிரஸையும் அதன் தலைவர் ராகுல் காந்தியையும் மிகவும் மதிக்கிறேன். அதே நேரத்தில் உத்தர பிரதேசத்தில் கணக்கை சரியாக புரிந்து கொண்டே மாயாவதியுடன் மட்டும் சமாஜ்வாடி கூட்டணி வைத்தது. இப்போதும் காங்கிரஸுடன் நான் நல்ல நட்புறவில்தான் உள்ளேன்” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர், “தேர்தல் முடிந்த பின்னர் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா?” என்று கேட்டார். அதற்கு அகிலேஷ், “அது குறித்து இப்போது பேச முடியாது. தேர்தலுக்குப் பிறகுதான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியும். ஆனால், ஒரு விஷயம் உறுதி. நாட்டுக்குப் புதிய பிரதமர் தேவைப்படுகிறார். இந்தத் தேர்தல் புதிய பிரதமரைக் கொடுக்கும்” என்று அதிரடியாக பதில் அளித்தார்.
அவர் மேலும், “பாஜக-வுக்கு உத்தர பிரதேசத்தில் இருக்கும் தொகுதிகளை மட்டும் எடுத்துவிட்டால், பெரும்பான்மையை இழந்துவிடுவார்கள். ஆகவேதான் இந்த முறை சரியான வியூகம் அமைத்துள்ளேன்” என்றார்.
2017 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துத்தான் சமாஜ்வாடி தேர்தலை சந்தித்தது. ஆனால் அவர்கள் கூட்டணியை பாஜக தவிடுபொடியாக்கி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது.
இதையடுத்துதான் சென்ற வாரம் அகிலேஷ் மற்றும் மாயாவதி, ‘உத்தர பிரதேசத்தில் இருக்கும் 80 தொகுதிகளில் 78-ல் எங்கள் கூட்டணி போட்டியிடும்' என்றனர். இரு கட்சிகளும் சமமான இடங்களில் போட்டியிடும் என்றும் கூறினர். அதே நேரத்தில் காங்கிரஸ், ‘நாங்கள் 80 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம்' என்று கூறியுள்ளது.