This Article is From Apr 07, 2020

தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்? பாஜக ஆளாத மாநிலம் என்பதாலா? ஸ்டாலின் கேள்வி

கொரோனா தொற்றை மார்ச் இரண்டாவது வாரம் வரைக்கும் உள்ளே அனுமதித்துவிட்டு, அதன்பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியதற்கு என்ன காரணம் என்பதைக் காலம் உரிய கட்டத்தில் சுட்டிக்காட்டும்.

Advertisement
இந்தியா Edited by

தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்? பாஜக ஆளாத மாநிலம் என்பதாலா? ஸ்டாலின் கேள்வி

Highlights

  • தமிழகத்துக்குக் குறைவான நிதி ஒதுக்கியது ஏன்?
  • பாஜக ஆளாத மாநிலம் என்பதாலா?
  • மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை

தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்? பாஜக ஆளாத மாநிலம் என்பதாலா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "மனிதகுல வரலாற்றின் மாபெரும் துயரம் என்று சொல்லக்கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று சீனாவிலிருந்து பரவிய காலத்திலேயே, அதாவது ஜனவரி மாதத் தொடக்கத்திலேயே, இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்குமானால், இந்தியாவுக்கு இத்தகைய மோசமான நிலைமை ஏற்பட்டு இருக்காது.

மார்ச் மாதம் இரண்டாவது வாரம் வரைக்கும் மத்திய - மாநில அரசுகள் காட்டிய அலட்சியம்தான் இந்த அவலமான சூழ்நிலைக்குக் காரணம் என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்; அனைவரும் உணர்ந்துதான் ஆக வேண்டும்.

கொரோனா தொற்றை மார்ச் இரண்டாவது வாரம் வரைக்கும் உள்ளே அனுமதித்துவிட்டு, அதன்பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியதற்கு என்ன காரணம் என்பதைக் காலம் உரிய கட்டத்தில் சுட்டிக்காட்டும்.

Advertisement

இதைத்தொடர்ந்து, எடுக்கப்படும் நடவடிக்கைகளாவது முறையானதாக இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து தமிழகத்தில்தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார், ஒடிசா ஆகிய மாநிலங்களை விட தமிழகத்துக்குக் குறைவான நிதியை ஒதுக்கியிருப்பதற்கு என்ன காரணம்?

பாஜக ஆளாத மாநிலம் என்பது காரணமா? 234 பேர் பாதிக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு 966 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு 510 கோடி ரூபாய் தானா?

Advertisement

மற்ற மாநிலத்துக்கு ஏன் அதிக நிதி ஒதுக்கினீர்கள் என்று கேட்கவில்லை; தமிழகத்துக்கு ஏன் குறைவாக ஒதுக்குகிறீர்கள் என்று தான் கேட்க விரும்புகிறேன்.

தமிழக அரசு முதலில் 9 ஆயிரம் கோடி ரூபாயும், பின்னர் 3,200 கோடி ரூபாயும் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து வந்திருப்பது மொத்தமே 510 கோடி ரூபாய் என்றால், இதிலிருந்து தெரிவது, மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை மட்டும்தான்; கொரோனா அரசியல்தான்!

நாடாளுமன்ற உறுப்பினர் நிதி என்பது அவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதிச்சலுகை அல்ல; அது நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூலமாக மக்களின் தேவை அறிந்து, அதை நிறைவு செய்திடும் திட்டங்களுக்கான தொகைதான்.

Advertisement

தொகுதி மக்களின் நல்வாழ்வுக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்வதை விடுத்து, இருந்த நிதியையும் பறிப்பது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை நெருக்கடியில் நிறுத்துவதாகும்.

இதனை ஜனநாயக வழிமுறை என ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என்பதே நியாயமானதாகும்.

Advertisement

சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் ஆகிய பிரச்சினைகள் உயிரிழப்புகளில் கொண்டுபோய் விடுவதாக மாறிவரும் சோகமான சூழ்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளையும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, அனைவரும் ஏற்கத்தகுந்த காரியங்களில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்; ஈடுபடும் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement