This Article is From Aug 20, 2019

துண்டுச்சீட்டு பார்த்து பேசுவது ஏன்? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்!

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் வளத்தை பொறுத்தமட்டில் அதிக லாபத்தில் இயங்கி கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார். ஆனால் முதலமைச்சர் பழனிசாமி நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது என்கிறார்.

துண்டுச்சீட்டு பார்த்து பேசுவது ஏன்? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்!

ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல், லஞ்சம் ஆகியவற்றை மறைக்கவே மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக நான் கருதுகிறேன்

மேடைகளில் நீங்கள் துண்டுச்சீட்டு இல்லாமல் பேசுவதில்லை என பாஜக குற்றம்சாட்டுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காத ஸ்டாலின், நிதானமாக பதிலளித்துள்ளார். 

நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பால் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்று முறை பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் வார்ப்பார்கள் என்பதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். 

அந்த பாலினால் மக்களின் வயிற்றில் அடித்திருக்கக் கூடிய நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. பால் உற்பத்தியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தவே முயற்சி நடக்கிறது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பால் வளத்தை பொறுத்தமட்டில் அதிக லாபத்தில் இயங்கி கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்.

ஆனால் முதலமைச்சர் பழனிசாமி நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. அதனால்தான் பால்விலையை உயர்த்தினோம் எனத் தெரிவிக்கிறார். அவர்களுக்குள்ளேயே முரண்பாடு உள்ளது. எது உண்மை எது பொய் என்பதை மக்களிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும் என்றார். 

மாவட்டங்கள் தொடர்ச்சியாக பிரிக்கப்படுவது வளர்ச்சிகானதா? நிர்வாக குறைப்பாடா? 

ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல், லஞ்சம் ஆகியவற்றை மறைக்கவே மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக நான் கருதுகிறேன். 

நாடாளுமன்றத்தில் 3வது பெரும் கட்சியான திமுக தேசிய அரசியலை நோக்கி செல்கிறதா? காஷ்மீர் விவகாரம் குறித்து டெல்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளீர்கள்? 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும், தமிழகத்திற்காக மட்டுமல்ல, இந்தியாவில் ஏற்படக்கூடிய எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை உரிமையோடு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் நிலையே இருந்து வருகிறது. அது இப்போதல்ல, கலைஞர், அண்ணா காலத்தில் இருந்தே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. 

நீங்கள் துண்டுச்சீட்டு இல்லாமல் பேசுவதில்லை என பாஜக குற்றம்சாட்டுகின்றனர் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அது அவர்களின் தரத்தை குறிப்பிடுகிறது, எதையும் ஆதாரத்துடனும் புள்ளிவிவரங்களோடும் சொல்ல வேண்டும், பொத்தாம் பொதுவாக தமிழிசை, பொன்.ராதா கிருஷ்ணன், எச்.ராஜா போன்று பேசக்கூடாது என்று அவர் கூறினார்.

.