This Article is From Apr 17, 2019

கோடிகோடியாக பணம் உள்ள தமிழிசை வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்? - மு.க.ஸ்டாலின்

கோடிகோடியாக பணம் வைத்திருக்கும் தமிழிசை வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோடிகோடியாக பணம் உள்ள தமிழிசை வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்? - மு.க.ஸ்டாலின்

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்த தொகுதி வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டதாக வந்த தகவலை தொடர்ந்து, துரை முருகனின் வீட்டில் கடந்த மார்ச் 30-ம்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இதில் ரூ.10.5 லட்சம் பணம் கைப்பற்றறப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பின்னர் ரூ.11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைப்பதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார். தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. பரப்புரை நிறைவடைந்த ஒரு மணி நேரத்தில் அந்த அறிவிப்பு வெளியானது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவின் மீது களங்கம் ஏற்படுத்த தேர்தல் ஆணையத்தை மோடி பயன்படுத்துகிறார்.

தூத்துக்குடியில் உள்ள கனிமொழியின் வீட்டில் சோதனை நடத்துகின்றனர். யார் கொடுத்த புகார் என்று தெரியவில்லை, ஒரு பகிரங்கமான குற்றச்சாட்டை கூறுகிறேன். தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசை வீட்டில் கோடிகோடியாக பணம் வைத்துள்ளனர், அங்கு ஏன் சோதனை செய்யவில்லை?

இதைத்தொடர்ந்து கனிமொழி வீட்டில் சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகாமாக சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், எதுவும் கிடைக்காமல் சோதனையை முடிந்து அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, சோதனையில் எதுவுமே நடக்கவில்லை என அவர்களே ஒப்புக்கொண்டு சென்றுள்ளார்கள். தமிழிசை வீட்டில் கோடிக் கோடியாய் பணம் இருக்கிறது அங்கு சென்று சோதனை செய்ய தயாரா? தேனியில் நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அங்கு சென்று சோதனை செய்ய தயாரா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். இதையே தான் நானும் கேட்கிறேன் என்றார்.


 

.