முன்னதாக, உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு கடந்த மே மாதம் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.
அதில், தற்போது மக்களவைத் தேர்தல் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாக்காளர் பட்டியலை சரிபார்க்க, மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆட்களும் நேரமும் இல்லை. இதனால் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த முடியவில்லை என்று தெரிவித்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், தொகுதி பங்கீடு காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்திருந்த நிலையில் சமீபத்தில் மக்களவை தேர்தலை காரணம் காட்டி, தேர்தலை நடத்த முடியவில்லை என்று தெரிவித்து வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தொகுதி மறுவரை செய்யும் பணி நடந்ததால் தான் தேர்தலை நடத்த முடியவில்லை.
இந்தப் பணி நிறைவடைந்து தொகுதி மறுவரையறை குறித்த அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பிருப்பதாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட அதே பதில் மீண்டும் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி பணிகளை எப்போது நடைபெறும்? என்பதை இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.