‘குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு பதிலாக, குழந்தைகள் நலத்துக்கு மட்டும் ஏன் தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்படக் கூடாது?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கிரிஜா ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம், குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு போஸ்கோ சட்டத்திற்குக் கீழ் தண்டனை வழங்குவதற்குக் கூடுதலாக, காயடித்தலை செய்யலமா என்பதை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. மேலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக மிகத் தீவிரமான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போது உத்தரவிடப்பட்டிருந்தது. இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கோரியிருந்தார்.
இதையடுத்து வழக்கு குறித்து பேசிய நீதிபதி கிருபாகரன், ‘நாட்டில் குழந்தைகளுக்கு எதிராக அதிக கொடுமைகள் நடக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தான், குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக இருந்து வருகிறது. ஆனால், குழந்தைகள் நலத்துக்காக மட்டும் ஒரு அமைச்சகம் இருக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. இது குறித்து சொலிசிட்டர் ஜெனரல் மத்திய அரசிடம் கருத்து கேட்க வேண்டும்’ என்று கோரி வழக்கை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)