கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளதாக வெளிவந்த செய்திகள் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாலை 3 மணி முதல் 8:30 மணி வரை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய யாகம் வளர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை அதிமுக தரப்பு மறுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து சீறி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது ஏன் யாகம் நடத்தப்பட்டது என்பது குறித்து புதிய காரணம் கூறியுள்ளார். சேலத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால்தான் தற்போதைய ஆட்சி உருவாக்கப்பட்டுத் தந்தது. அவர் மறைவுக்குப் பிறகு ஒரு விபத்தால் முதல்வரானவர் எடப்பாடி பழனிசாமி. தலைமைக்கு வந்த பிறகு அவர் என்னென்னப் பிரச்னைகளையெல்லாம் சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். கரப்ஷன், கமிஷன், கரெக்ஷன் என்ற நிலையில்தான் எடப்பாடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். மக்களைப் பற்றியோ, மக்களையின் பிரச்னைகளைப் பற்றியோ கிஞ்சித்தும் சிந்திக்காத ஒரு ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஓபிஎஸ்-ஸோடு சேர்த்து 11 சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை என்னவென்பது குறித்து உச்ச நீதிமன்றம் சீக்கிரமே முடிவெடுக்கும். அந்த வழக்கிலிருந்து தப்பிக்கவே கோட்டையில் ஓபிஎஸ் யாகம் நடத்தியுள்ளார். யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டோம் என்று அவர் சொல்கிறார்” என்று பேசினார்.