This Article is From Jun 06, 2019

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? உயர்நீதிமன்றம்

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வலியுறுத்தி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன்பு கடந்த ஜூன் 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழகத்தில் ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதில், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவது குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

மேலும், தற்போது வெயில் அதிகம் இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மட் அணிவதில்லை என்று தமிழக அரசு தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைத்தொர்ந்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து ஜூன் 6-ந்தேதி போக்குவரத்து காவல்துறையின் இணை மற்றும் துணை கமி‌ஷனர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை இணை மற்றும் துணை ஆணையர்கள் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அபராதம் உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் விளக்கமளித்தனர்.

இதையடுத்து, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பதில்லை என கூறிய நீதிபதிகள், பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதி கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது. இதுபோன்ற பெரு நகரங்களிலேயே இந்த சட்டம் கடுமையாக கடைபிடிக்கப்படும் போது, தமிழகத்தில் ஏன் முடியவில்லை? என கேள்வி எழுப்பினர்.

Advertisement

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், கடந்த 6 மாதங்களில் ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பது உள்ளிட்ட சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

அப்போது, குறிக்கிட்ட நீதிபதிகள், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மோட்டார் வாகன சட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதா? என கேள்விகளை எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், சட்ட விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டது.

Advertisement

இதனையடுத்து, கட்டாய ஹெல்மெட் சட்டம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம் அளித்து, வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement