தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூர் தொகுதியில் மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையத்தில் மத்திய அரசின் தலையீட்டை காட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த ஆக.7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, கலைஞரின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கலைஞரின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வரும் 10ம் தேதி வரை நடக்கயிருக்கிறது.
இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரணப் பணிகள் முழுமையடையாத நிலையில் இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறும்போது,
கஜா புயல் பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தேர்தலுக்காக அங்கு சென்று பரப்புரை மேற்கொள்வது என்பது நமக்கே ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. கட்டாயமாக ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அந்த நெருக்கடி ஏற்படும். ஆளும் கட்சியான அதிமுகவுக்கும் அந்த நெருக்கடி ஏற்படும்.
எனவே அவசரம் அவசரமாக ஒரேயொரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையத்தில் மத்திய அரசின் தலையீடு இருப்பது என்பதை இது உணர்த்துகிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். இப்படி அரசின் தலையீடுகளுக்கு அடிப்பனிய கூடாது என்று அவர் கூறியுள்ளார்.