தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு தொடர் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த போராட்டத்தின் 100வது நாளையொட்டி, கடந்த ஆண்டு மே 22–ந் தேதி, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அறியாமல், போராட்டக்காரர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
இதில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் இன்னும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின், முதலாவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில், நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு பொதுமக்கள் பேரணியாக செல்லவோ, அல்லது பொது இடங்களில் அஞ்சலி செலுத்துவதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அனுமதி மறுத்துள்ளது. மேலும், தூத்துகுடி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தூத்துக்குடி பெல் ஹோட்டலில் 22ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை நினைவஞ்சலி கூட்டம் நடத்தவும், அதில் 500 பேர் பங்கேற்கவும் அனுமதி வழங்கினர்.
ஆனால், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், துணை ஆட்சியரும் 107 மற்றும் 111 ஆகிய பிரிவுகளின் கீழ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறியுள்ளனர். இதுபோல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த தடைவிதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர், ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் போராட்டங்கள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் சிலர் குற்றவாளிகள் என முடிவுக்கு வந்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ஸ்டெர்லெட் விவகாரத்தில் சட்டவிரோத கைது நடவடிக்கைகளை நிறுத்துங்கள், ஸ்டெர்லைட் வேண்டாம் என்பதே அரசின் கொள்கை முடிவாக இருக்கும்போது, அதேகருத்து கொண்டோரை துன்புறுத்துவது ஏன்? அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? துன்புறுத்துவதா? என நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
தொடர்ந்து, ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக்கூடாது என்றும் இந்த பிரிவுகளின் கீழ் புதிய சம்மன்களை அனுப்பக்கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.