This Article is From Dec 03, 2018

7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் தயங்குவது ஏன்? திருமாவளவன் கேள்வி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் தயங்குவது ஏன்? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்,திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் தயங்குவது ஏன்? திருமாவளவன் கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை தாமதம் செய்யும் ஆளுநரைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக நிர்வாகிகள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், துணைப் பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மே-17 இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஏன் ஆளுநர் இவ்வளவு தயங்குகிறார்? யார் அவரை தடுப்பது? என்ன நெருக்கடி? நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பை வழங்கிவிட்ட நிலையில், தாமதிப்பது ஏன்? இந்த முடிவினை எடுப்பதற்கு ஆளுநர் முழு அதிகாரம் பெற்றவர்.

ஆனாலும், 7 பேரை விடுதலை செய்ய முடியாது என பிடிவாதம் பிடிக்கிறார். இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடியிடம் ஆளுநரிடம் மீண்டும் ஏன் முறையிட கூடாது என்று கேட்டபோது, ஆளுநரின் முடிவில் மத்திய அரசே தலையிடாது என்ற நிலையில், நாங்கள் எப்படி மீண்டும் அழுத்தம் கொடுக்க முடியும். ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என என்னிடம் முதல்வர் தெரிவித்தார்.

இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது அடுத்தக்கட்ட போராட்டம் ஆளுநர் மாளிகையை காலி செய்வது தான் என்று அவர் கூறினார்.

.