This Article is From May 01, 2019

3 எம்எல்ஏக்களுடன் சேர்த்து எனக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை? கருணாஸ் கேள்வி

3 எம்எல்ஏக்களுடன் சேர்த்து எனக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 எம்எல்ஏக்களுடன் சேர்த்து எனக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை? கருணாஸ் கேள்வி

அதிமுகவுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் தேர்தல் பிரச்சாரம் செய்ததாக புகார் வந்ததையடுத்து, அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயலில் ஈடுபடுவதாக அவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்டு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதிமுக கொறடா அளித்த புகாரின் அடிப்படையில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 7 நாட்களுக்குள் நோட்டீசுக்கு விளக்கம் தர வேண்டும் என்றும் மூவரின் பதிலும் திருப்தி தரவில்லை என்றால் தகுதி நீக்கம் செய்யவும் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது என்றும் சபாநாயகர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், இடைத்தேர்தலின் முடிவு வெளியான பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அப்போது உள்ள சூழலுக்கு ஏற்ப நான் முடிவெடுப்பேன்.

3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே தற்போது உள்ள அதிமுக அரசின் ஐயப்பாட்டை இது காட்டுகின்றது, தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக மக்களுக்கு இந்த நடவடிக்கை வெளிச்சத்துக்கு வரும்.

அந்த மூன்று எம்எல்ஏக்களுடன் சேர்த்து எனக்கு சபாநாயகர் ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நோட்டீஸ் எனக்கு அனுப்பியிருந்தால் நான் என்ன செய்வேன் என்று அவர்களுக்கே தெரியும். அதனால்தான் அவர்கள் எனக்கு அனுப்பவில்லை என்று அவர் கூறினார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.