This Article is From Feb 07, 2019

“வேற வழி தெரியல சார்!”- அரசு துப்பரவுப் பணிக்கு விண்ணப்பித்த பொறியாளர் வேதனை

தலைமைச் செயலகத்தில், 14 துப்பரவுப் பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

விண்ணப்பம் செய்த பொறியியல் பட்டதாரிகளில் ஒருவர்தான் தன்சிங் அருள்

ஹைலைட்ஸ்

  • 14 பணிக்கு 4,000 பட்டதாரிகள் அப்ளை செய்தனர்
  • இந்த செய்தி வருத்தமளிக்கிளது, அரசு தரப்பு கருத்து
  • 'தமிழகத்தில் 20% பட்டதாரிகளுக்குத் தான் பணி செய்யும் திறன் உள்ளது'
Chennai:

சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும் தமிழக அரசின், தலைமைச் செயலகத்தில், 14 துப்பரவுப் பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அந்தப் பணிக்குச் சேர எம்.டெக், பி.டெக், எம்.பி.ஏ போன்ற கல்வி பயின்ற பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் இருக்கும் 14 காலி இடங்களுக்கு, மொத்தமாக 4,000-த்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். 

விண்ணப்பம் செய்த பொறியியல் பட்டதாரிகளில் ஒருவர்தான் தன்சிங் அருள். 23 வயதாகும் அருள் பல மாதங்கள் தூத்துக்குடியில் தினக் கூலியாக வேலை பார்த்து வந்தார். தற்போது சென்னையின் புறநகர்ப் பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார். அரசு கொடுத்த லேப்டாப் மூலம், தான் தகுதி பெறும் அனைத்து வேலைகளுக்கும் தீவிரமாக விண்ணப்பித்து வருகிறார் அருள். 

4 மாதங்களாக எந்த வேலையும் கிடைக்காததால், நொந்து போயிருக்கும் அருளிடம் ஸ்மார்ட் போன் கூட இல்லை. பழைய டிஜிட்டல் போன் வைத்துள்ளார். அதிலும் பேலன்ஸ் இல்லை. இணைய சேவைக்குக் கூட தனது நண்பர்களின் ‘ஹாட்-ஸ்பாட்டை' நம்பித்தான் காலம் கழித்து வருகிறார். 

“எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஒரு பொறியாளராக நான் தகுதி பெற்றிருக்கும்போதும், எனக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால்தான் குறைந்தபட்சம் இந்த வேலையாவது கிடைக்குமா என்ற நம்பிக்கையில் அப்ளை செய்துள்ளேன்” என்று வேதனையுடன் NDTV-யிடம் பகிர்ந்தார். 

இவ்வளவு பட்டதாரிகள், துப்பரவுப் பணிக்கு விண்ணப்பித்துள்ளது குறித்து தமிழக அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரினம் பேசியபோது, “மாநில மக்களுக்கு வேலை கொடுக்க வேண்டியது எங்கள் கடமைதான் என்றாலும், ஒரே ஆண்டில் 60 லட்சம் பணிகளை எங்களால் உருவாக்க முடியாது. இளைஞர்கள், அரசு வேலைதான் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள். ஏன் என்றால் அதில்தான் ஒரு பாதுகாப்பு இருக்கிறது என்று நினைக்கின்றனர். அவர்கள் தனியார் துறையில் முயற்சிக்க வேண்டும். சுய தொழில் தொடங்கவும் தயங்கக் கூடாது” என்றார். 

ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவை, தமிழக அளவிலும் இந்திய அளவிலும் உற்பத்தித் துறையில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டைவிட தற்போதைய நிலை சற்று பரவாயில்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 

குறிப்பாக வல்லுநர்கள், தமிழகத்தில் பட்டப்படிப்பு முடிக்கும் பட்டதாரிகளில் 20 சதவகிதம் பேருக்குத் தான் வேலை செய்யும் திறன் இருக்கிறது. மற்றவர்களுக்கு அடிப்படைத் தகுதியே இல்லாமல் இருக்கிறது என்கின்றனர். போதிய திறனில்லாமல் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் இந்த நிலைக்குக் காரணமாக இருக்கலாம் எனப்படுகிறது. குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு திறமை குறைவாக இருப்பதாக தெரிகிறது. 

இது குறித்து மேலும் விளக்கிய கோவனென்ட் குழும தலைவர் ஜோஷ்வா மதன், “வேலை வாய்ப்பின்மை இருப்பதற்குக் காரணம் திறமையான கல்வி இல்லாததனால்தான். நமது கல்வி நிறுவனங்களில் கற்றுக் கொடுப்பதற்கும், நிறுவனத்தில் இருக்கும் நடைமுறைகளுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கின்றன. அது போக்கப்பட வேண்டும்” எனக் கூறினார். 

.