This Article is From Apr 23, 2019

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது ஏன்? - தமிழக காங்கிரஸ் தலைவர் விளக்கம்!!

பாரத் மாலா என்ற மத்திய அரசின் திட்டத்தில் சென்னை - மதுரை சாலைதான் உள்ளது. அதனை புறக்கணித்து விட்டு தமிழக அரசு சென்னை - சேலம் சாலையை கையில் எடுத்திருக்கிறது என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது ஏன்? - தமிழக காங்கிரஸ் தலைவர் விளக்கம்!!

சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்தன.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம் அளித்துள்ளார். 

திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 8 வழிச்சாலை திட்டம் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்-

எந்த சாலை திட்டத்தையும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது இல்லை. சாலைகள் போட வேண்டியது அவசியம் என்றுதான் காங்கிரஸ் கருதுகிறது. சாலைகள் இல்லாமல் நாடு இயங்காது. 

அதிக சாலைகள் அமைப்போம், துறைமுகங்கள் கட்டுவோம் என்றுதான் கட்சிகள் ஆள்கிறபோதும், எதிர்க்கட்சியாக இருக்கிறபோதும் வாக்குறுதி அளிக்கும். ஆனால் சென்னை - சேலம் 8 வழிச்சாலையை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. ஏனென்றால், இந்தியாவின் தேசிய சாலை ஆணையம் நிர்ணயித்துள்ள 12 விதிகளில் எதனையும் தமிழக அரசு கடைபிடிக்கவில்லை. 

சுற்றுச் சூழல் அமைச்சகம், பிரதமர் தலைமையிலான பொருளாதார குழு இவைகளிடம் நேரடியாக அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதியும் பெறப்படவில்லை. இதேபோன்று சாலைக்கான திட்ட வரைவு, சென்னை - சேலம் சாலைக்கான திட்டவரைவு அல்ல. அது சீனா, பெங்களூரு சாலையின் திட்ட வரைவு ஆகும். 

அதனை எடுத்து வந்து சென்னை - சேலத்திற்கான சாலை திட்டவரைவு என்று அறிவித்திருக்கிறார்கள். பாரத் மாலா என்ற மத்திய அரசின் திட்டத்தில் சென்னை - மதுரை சாலைதான் உள்ளது. அதனை புறக்கணித்து விட்டு தமிழக அரசு சென்னை - சேலம் சாலையை கையில் எடுத்திருக்கிறது. 

அடுத்ததாக சுங்க கட்டணம். மற்ற சாலைகளை விட சென்னை - சேலம் விரைவு சாலைக்கு 33 சதவீதம் கட்டணம் அதிகமாக வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் முதலீட்டு தொகை அதிகமாக காட்டப்பட்டுள்ளது. இதையெல்லாம் காரணம் காட்டித்தான் 8 வழிச்சாலை திட்டத்தை நீதிமன்றமும் எதிர்க்கிறது. நாங்களும் எதிர்க்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார். 

.