MK Stalin: கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களுடன் வெளியே வந்த ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்துத் தங்கள் முடிவுக்கான காரணங்களை அடுக்கினார்.
MK Stalin: இன்று, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் இது என்பதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன், கூட்டம் தொடங்கப்பட்டது. அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக. கட்சியின் அனைத்து எம்எல்ஏக்களுடன் வெளியே வந்த ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்துத் தங்கள் முடிவுக்கான காரணங்களை அடுக்கினார்.
“ஆளுநர் உரையைப் புறக்கணித்ததற்கான காரணங்கள்.
1.தமிழகத்தின் கடன் தொகை நான்கு லட்சம் கோடி.
2.தொழில் வளர்ச்சி சுத்தமாக இல்லை.
3.பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, தற்போது ஆட்சியில் இருக்கும் அமைச்சரவை, இதே ஆளுநருக்கு தீர்மானம் போட்டு அனுப்பியது. அது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
4.இந்த நாட்டினுடைய மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக. அதனால், அச்சட்டம் நிறைவேறி இன்று சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
5.அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போலீஸ், தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை கைக்குள் வைத்துக் கொண்டு அராஜகப் போக்கில் ஈடுபட்டது அதிமுக.
6.நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் புதிய சீராய்வு மனுவைப் போட்டுள்ளது அதிமுக அரசு. ஆனால், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எதிர்ப்புத் தீர்மான மனுக்கள் என்னவானது. அதைப் பார்க்காமல், கபட நாடகம் ஆடுகிறது அதிமுக.
இதையெல்லாம் கண்டிக்கக்கூடிய வகையிலேயே ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம்,” என்று விளக்கினார் மு.க.ஸ்டாலின்.