Ayodhya Verdict: கோயில் கட்டுவது தொடர்பான திட்டத்தை 3 மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
New Delhi: அயோத்தி வழக்கில் (Ayodhya Case) இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (Ranjan Gogoi) தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு இன்று தீர்ப்பு வழங்கியது.
இதன்படி சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு தொடர்ந்த சன்னி வக்ப் வாரியத்திற்கு, அயோத்தியிலேயே மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தவிட்டுள்ளது. மேலும், கோயில் கட்டுவது தொடர்பான திட்டத்தை 3 மாதங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
சர்ச்சைக்குரிய இடம் ஏன் கோயில் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டது:
“…பிரச்னைக்குரிய இடம், இந்துக்களுக்குச் சொந்தம் என்று உரிமை கோரும் ஆதாரங்களில், முஸ்லிம்களுக்குத்தான் அந்த இடம் சொந்தம் என்று உரிமை கோரும் ஆதாரங்களைவிட ஸ்திரமாக உள்ளன.”
எதற்கு முஸ்லிம்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது:
“…1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி, முஸ்லிம்களுக்குச் சொந்தமான மசூதி தகர்க்கப்பட்டது. அதே நேரத்தில் முஸ்லிம்கள் அதை விட்டுத்தரவில்லை. இப்படி முஸ்லிம்களுக்கு உரிமையுள்ள ஒரு நிலம் தொடர்பான விவகாரத்தை நாம் கவனிக்கவில்லை என்றால், சட்டத்தினால் ஆட்சி நடக்கும் ஒரு மதச்சார்பற்ற தேசத்தின் நீதி நிலை பெறாது.”
நிலத்தைப் பகிர்ந்தளித்தல் ஏன் நிரந்தர அமைதியைத் தராது:
“உயர் நீதிமன்றத் தீர்ப்பில் சொன்னது போல 3 பிரிவாக நிலத்தைப் பிரித்துத் தருவது சரியாக இருக்காது.
பொது அமைதியை பாதுகாக்கும் நோக்கில் பார்த்தால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தீர்வாக இருக்காது. நிலத்தைப் பகிர்ந்தளிப்பது இரு தரப்புக்கும் அதிருப்தியைத்தான் உண்டாக்கும். நிலைத்த அமைதியும் நிலவாது.”
பாபர் மசூதி இடிப்பு சட்டத்துக்குப் புறம்பானது:
“பொதுவான ஓர் இடத்தில் தொழுகை நடத்துவதைக் குலைக்கும் நோக்கில் மொத்த மசூதியும் தரைமட்டமாக்கப்பட்டது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, தங்களுக்குச் சொந்தமான மசூதியிலிருந்து முஸ்லிம்கள் பிரிக்கப்பட்டார்கள்.”