This Article is From Jul 16, 2020

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்

இறுதித் தேர்வை எழுதாத 34,842 மாணவர்கள் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திடீரென வெளியிடப்பட்டது ஏன்? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். 

தமிழகத்தல் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, மார்ச்.2ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வு 24ம் தேதியுடன் முடிவடைந்தது. கடைசி தேர்வின் போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 36,000 மாணவர்கள் வரை தேர்வில் பங்கேற்க முடியாமல் போனது.

இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வரும் 27ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும், அவர்களும் தேர்வு எழுதி முடித்த பின்னர் ஒட்டுமொத்தமாக தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அறிவித்திருந்தார். 

இதனிடையே, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என இன்று காலை திடீரென அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து, சில மணி நேரத்தில் தேர்வு முடிவும் வெளியானது. மாணவர்கள், பெற்றோர்கள் என  யாருக்கும் முன்கூட்டியே தெரியப்படுத்தாமல் முடிவுகள் வெளியிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் நலன் கருதியும், அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.  

மாணவர்கள், பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்விதுறை வெளியிட்டது. 24.03.2020 அன்று நடைபெற்ற பன்னிரெண்டாம் தேர்வுகளான வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் தற்போது வெளிடப்படும். 

27.07.2020 அன்று நடைபெற உள்ள 12ம் வகுப்பு மறு தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கு, மறுதேர்வு முடிவடைந்த பின்னர் தேர்வு எழுதிய அனைத்துப் பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

அதனால், இறுதித் தேர்வை எழுதாத 34,842 மாணவர்கள் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. முதல்வரின் ஆணைப்படி அவர்கள் அனைவரும் பொதுத்தேர்வை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

.