ஒவ்வொரு ஸ்குவாட் போடப் போட, அந்த இயந்திரம் அதை கணக்கிடுகிறது. 30 ஸ்குவாட் முடித்தவுடன் அந்த இயந்திரம் அவருக்குப் பயணச்சீட்டை வழங்குகிறது.
டெல்லியில் இருக்கும் ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில், உடற்பயிற்சி செய்தால் பணம் சேமிக்கும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்குவாட் இயந்திரத்துக்கு முன்னால் நின்று, உடற்பயிற்சி செய்தால், இலவசமாக பிளாட்ஃபார்ம் டிக்கெட் கொடுக்கப்படும். இந்த புதிய திட்டத்தை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்த கோயல், “உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க டெல்லி ஆனந்த் விகார் ரயில் நிலையத்தில் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு இயந்திரத்தின் முன் உடற்பயிற்சி செய்து நடைமேடை பயணச்சீட்டை இலவசமாக பெறலாம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் விரிவாக விளக்கியுள்ள ரயில்வே துறை அமைச்சகம், “180 நொடிகளில் 30 ஸ்குவாட் உடற்பயிற்சியை செய்து முடித்தால் உங்களுக்கு நடைமேடை டிக்கெட் இலவசம்,” என்றுள்ளது.
வீடியோவை கீழே பாருங்கள்:
அமைச்சர் கோயல் பகிர்ந்திருந்த வீடியோவில், ஒரு நபர் அந்த இயந்திரத்தின் முன்னர் உடற்பயிற்சி செய்வது தெரிகிறது. அவர் ஒவ்வொரு ஸ்குவாட் போடப் போட, அந்த இயந்திரம் அதை கணக்கிடுகிறது. 30 ஸ்குவாட் முடித்தவுடன் அந்த இயந்திரம் அவருக்குப் பயணச்சீட்டை வழங்குகிறது.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, “ஃபிட் இந்தியா” இயக்கத்தை ஆரம்பித்தார். குடிமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார் பிரதமர் மோடி.
Click for more
trending news