தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மற்றும் வடக்கு தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு இருந்தது. இந்நிலையில் இன்றைய மழை நிலவரம் குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் வெதர்மேன், ‘தமிழக உள் மாவட்டங்களில் இன்று பரவலான மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அச்சுறுத்தும் வகையிலான மழை பொழிவு இருக்க வாய்ப்பில்லை. சென்னையில் இன்று விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் இதற்கு மேற்கொண்டு மழை பொழிவு இருக்காது.
இதுவரை வட கிழக்கு பருவமழை மூலம் சென்னைக்கு 350 மி.மீ மழைதான் பொழிந்துள்ளது. இது சராசரியான 850 மி.மீ அளவை விட மிகக் குறைவானது. டிசம்பரில் மட்டும் 500 மி.மீ மழை பொழியும் என்று எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில் பருவமழை முடியும் முன்னர் சென்னைக்கு குறைந்தபட்சம், சராசரி மழையாவது பொழியும் என்று நம்புவோம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வந்தவாசியில் 93 மி.மீ மழை பெய்துள்ளது. அதேபோல காஞ்சிபுரத்தில் 86 மி.மீ மழையும், பரங்கிக்கோட்டையில் 78 மி.மீ மழையும் பெய்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.