உ.பி. ஃபரூக்பாத் மாவட்டத்தில் 23 குழந்தைகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர்.
Farrukhabad: உத்தர பிரதேசத்தில் பிறந்தநாள் விழா என்று கூறி 23 குழந்தைகளை அழைத்து வந்து துப்பாக்கி முனையில் அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்த வைத்தவரின் மனைவியும் பொது மக்கள் தாக்கியதில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் ஃபரூக்பாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாஷ் பாதம். கொலை வழக்கில் சிறை சென்ற, பாதாம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனிடையே, நேற்று தனது மகளின் பிறந்த நாள் விழா என்று கூறி கிராமத்தில் உள்ள குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அதன்படி மாலையில் பிறந்தநாள் விழாவுக்கு வந்திருந்த 23 குழந்தைகளை துப்பாக்கி முனையில் வீட்டிலேயே சிறைபிடித்து வைத்துள்ளார் பாதம். இதைத்தொடர்ந்து, நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் வீடு திரும்பாததையடுத்து குழந்தைகளின் பெற்றோர் பாதம் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, பூட்டப்பட்டிருந்த வீட்டை அவர்கள் நீண்ட நேரம் தட்டியுள்ளனர். எனினும், கதவுகள் திறக்கப்படாததால், நிலைமை தவறாக இருப்பதை உணர்ந்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் ஆத்திரமடைந்த சுபாஷ் பாதம் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரை நோக்கியும் சுபாஷ் பாதம் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளார். அதோடு அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளையும் வீசியுள்ளார்.
தொடர்ந்து, பயங்கரவாத தடுப்புப் படை கமாண்டோக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். குழந்தைகளை விடுவிக்கும்படி சுபாஷை சமாதானப்படுத்த நீண்ட நேரமாக போலீசார் முற்பட்டனர். எனினும், சபாஷ் அதனை ஏற்கவில்லை.
இதையடுத்து, நள்ளிரவில் அதிரடியாக தாக்குதல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே போலீசார் வீட்டை நோக்கி முன்னேறினர். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் சுபாஷ் பாதம் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, 10 மணி நேரமாக நீண்ட மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்ததோடு, 23 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, சுபாஷின் மனைவியை ஊர் மக்கள் வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதையடுத்து ஊர் மக்களிடம் இருந்து போலீசார் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, சுபாஷ் பாதம் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுபாஷ் பாதமின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.