10% இடஒதுக்கீடு அமல்படுத்தும் கட்டாயம் மாநில அரசுகளுக்கு இல்லை என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் உயர்சாதி ஏழைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டநிலையில் அது சட்டமாகியுள்ளது.
இதைதொடர்ந்து, அவரது ஒப்புதலுடன் சட்டம் அரசிதழிலும் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசு அறிவித்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை முதல் மாநிலமாக குஜராத் அரசு அமல்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்,
10% இடஒதுக்கீடு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில் எந்த அளவுக்கு சட்டரீதியாக அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது கூற முடியாது. ஏற்கனவே 2 பேர் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். சட்ட ரீதியாக இது நிறைவேறி வரும் போது, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை எடுக்கும்.
கொள்கை ரீதியான நிலைப்பாடு என்பது தமிழக அரசு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது எடுக்கப்படும். தற்போதைக்கு முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று நினைக்கிறேன். எந்த மாநிலத்திற்கும் இதனை அமல்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் கிடையாது என்று அவர் கூறியுள்ளார்.