துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் முக்கிய பதிலை அளித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பும், ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் பொறுப்பும், நிதித்துறை அமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கும் வழங்கப்பட்டது.
குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னாள் வெளியுறவு செயலராக இருந்த ஜெய் சங்கருக்கு வெளியுறவு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
குறிப்பாக ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்திரநாத்திற்கு இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும், கடைசி வரை இதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இடம் பெறாதது குறித்து பாஜக மூத்த தலைவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
தமிழகத்தில் இருந்து அதிமுகவை சேர்ந்த ஒருவர்தான் எங்கள் கூட்டணியில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தற்போது அமைந்திருக்கும் அமைச்சரவை முழுமையானது அல்ல. சற்று கால அவகாசம் எடுத்து பூர்த்தி செய்யப்படும் என கருதுகிறேன்.
இவ்வாறு இல. கணேசன் கூறியுள்ளார். அவரது இந்த தகவலால் அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு நீடிப்பதாகவே கருதலாம்.