இதையே அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா?
அடுத்தகட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதையே அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, நேற்று மாலை சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு இருந்த நிர்கிகளிடம் பொருளாதார வீழ்ச்சி அடைவதற்கு என்ன காரணம்?, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது எதற்காக? என மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி வாதம் செய்துள்ளார்.
இதனை அவர் தனது முகநூலில் லைவ் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அப்போது இருதரப்பினரிடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாஜகவினர் பியூஸ் மனுஷ் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பியூஷ் மனுஷை மீட்டு அழைத்துச்சென்றனர். இதுதொடர்பாக விளக்கமளித்த பாஜகவினர், பியூஷ் மனுஷ் தன்னுடைய சுய விளம்பரத்திற்காக, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்திருந்தனர்.
பியூஷ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருத்தனர். அந்தவகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டர் பதிவில், பாஜக அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ், சேலம் பாஜக அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் ட்வீட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது, அடுத்தகட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதுதான் சமூக செயல்பாடா? சமூகஅமைதி சீர்குலைப்பா? சமூகஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்களை அடையாளம் காட்டுவோம்! இதையே அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா?
அன்று யாரோ எங்கேயோ பேசியதற்காக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தேடி வந்து வாசலில் இருந்த பெண் தொண்டர்களையும், என்னையும் மற்றும் காவலர்களையும் காயப்படுத்தி தாக்கியது திமுக என்பது கடந்தகால வரலாறு என்று அவர் கூறியுள்ளார்.