ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட்டுள்ள பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நடந்த தடியடி, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், ஸ்டர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. 3 வாரத்திற்குள் இதனை செய்து முடிக்க வேண்டும என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தி மேல் முறையீடு செய்யும் என்று தெரிவித்தார்.
பெரும் போராட்டத்திற்கு பின்னர் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதனை திறக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஸ்டெர்லைட் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.