தேசியக் கொடியோடு மதத்தை ஒப்பிட்டுப் பேசி கலங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், தமிழக முதல்வரை அவதூறு செய்யும் வகையில் பேசியுள்ளதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஹைலைட்ஸ்
- முதல்வர் குறித்து எஸ்.வி.சேகர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றச்சாட்டு
- தேசியக் கொடிக்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டதாகவும் குற்றச்சாட்டு
- ஜெயக்குமார், எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்
நடிகர் எஸ்.வி.சேகர் தேசியக் கொடி பற்றியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் அவதூறாக பேசியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “எஸ்.வி.சேகருக்கு சிறைக்குச் செல்ல வேண்டுமென நீண்ட நாட்களாக ஆசையாக இருந்தால், அதை தமிழக அரசு நிறைவேற்றும்” என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
முன்னதாக எஸ்.வி.சேகர், ‘அதிமுக கொடியிலிருந்து அண்ணாவின் படத்தை நீக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கட்சி உருப்பட முடியும்' என்று சர்ச்சையாக பேசினார். அதற்கு அதிமுக தரப்பிலிருந்து, ‘மான ரோஷம் உள்ளவராக இருந்தால், அதிமுக எம்எல்ஏவாக இருந்த எஸ்.வி.சேகர், 5 ஆண்டு சம்பளத்தைத் திருப்பித் தர வேண்டும்' என்று பதிலடி கொடுத்தது.
தற்போது சமூக வலைதளங்களில் பரவிவரும் ஒரு காணொலியில் சேகர், ‘சமீப காலமாக திமுக, அதிமுகவின் கொள்கை நிலைப்பாடுகளில் எந்தவித மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. காவியை கலங்கம் என்று சொல்கிறார் முதல்வர் பழனிசாமி. அப்படியென்றால், தேசியக் கொடி கலங்கமா? வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, அந்த கலங்கம் வாய்ந்த தேசியக் கொடியைத்தான் அவர் ஏற்றப் போகிறாரா?
காவியை மட்டும் வெட்டிவிட்டு, வெள்ளையையும் பச்சையையும் மட்டும் வைத்து கொடியேற்றப் போகிறீர்களா? அதன் மூலம் இந்துக்கள் வேண்டாம், கிறித்துவர்களும் முஸ்லிம்களும் போதுமென நினைக்கிறீர்களா? உங்கள் தலைமைச் செயலகம் எது, அறிவாலயமா?' என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார்.
இதைத் தொடர்ந்து தேசியக் கொடியோடு மதத்தை ஒப்பிட்டுப் பேசி கலங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும், தமிழக முதல்வரை அவதூறு செய்யும் வகையில் பேசியுள்ளதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “எஸ்.வி.சேகருக்கு வெகு நாட்களாக சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதை அதிமுக அரசு கட்டாயம் நிறைவேற்றும். அவர் பேசியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.