This Article is From Jul 25, 2019

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை; நகரத்தின் தண்ணீர் பிரச்னை தீருமா..?

தொடர் மழையால், சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு தீருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை; நகரத்தின் தண்ணீர் பிரச்னை தீருமா..?

சென்னைக்கு நீர் ஆதரமாக விளங்குவது பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள்தான். இந்த ஏரிகள் நிரம்பினால்தான், சென்னை மக்களுக்கு தடையின்றி நீர் கிடைக்கும்.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றிரவு பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த தொடர் மழையால், சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு தீருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னை மழைக் குறித்து வெதர்மேன், “சென்னையில் நேற்றுதான் இந்த ஆண்டின் அதிகபட்ச மழை பதிவானது. இந்த ஆண்டு சென்னையில் வெப்ப சலன மழையானது நல்ல வகையில் பெய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் அதிக வெப்ப சலன மழை வாங்கிய மாவட்டங்களின் பட்டியலில் சென்னை இணைந்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கும் மழை தொடரும். 

கடந்த 2 நாட்கள் பெய்த மழையானது கண்டிப்பாக நிலத்தடி நீரை அதிகரிக்க உதவும். ஏரிகள் இருக்கும் இடங்களிலும் மழை பெய்து வந்தாலும், அங்கு ஒரு இன்ச் நீர் அளவு கூட உயர்ந்திருக்காது. எனவே உங்களது மழை நீர் சேகரிப்புத் அமைப்பை தயார் நிலையில் வைத்திருக்கவும். இன்று வட சென்னையிலும் அதிக மழை பொழிவு இருக்கும் என நம்புவோம். இன்று காலை லேசான தூறல் இருக்கும். ஆனால், அது சீக்கிரமே சரியாகிவிடும்.

சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் 75 மில்லி மீட்டர் மழை பதிவானது. காட்டாக்குளத்தூரில் 66 மில்லி மீட்டர் மழையும், கிண்டியில் 64 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது” என்று தகவல் தெரிவித்துள்ளார். 

சென்னைக்கு நீர் ஆதரமாக விளங்குவது பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள்தான். இந்த ஏரிகள் நிரம்பினால்தான், சென்னை மக்களுக்கு தடையின்றி நீர் கிடைக்கும். இதுவரை இந்த ஏரிகளில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நீர் நிரம்பவில்லை என்கிறார் வெதர்மேன்.

.