தூத்துக்குடியில் தென் மண்டல சமக மகளிரணி சார்பில் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்
ஹைலைட்ஸ்
- 2011-ல் அதிமுக கூட்டணியில் நின்று போட்டியிட்டார் சரத்குமார்
- அதில் அவர் வெற்றி பெற்று முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனார்
- 2016-லும் அதிமுக கூட்டணியில் நின்று தோல்வியடைந்தார் சரத்குமார்
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் தென் மண்டல சமக மகளிரணி சார்பில் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த சரத்குமார், ‘வரும் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி' என்று தடாலடியாக அறிவித்தார்.
தனித்துப் போட்டியிட உள்ளதற்குக் காரணம் என்னவென்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘அரசியலில் கடந்த 22 ஆண்டுகளாக மற்றவர்களுக்காக நான் தொடர்ந்து உழைத்து வந்திருக்கிறேன். சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பித்து, இதுவரை யாருடுனாவது கூட்டணி வைத்துத்தான் தேர்தலை சந்தித்து வந்துள்ளோம்.
இதுவரை எங்கள் பலம் என்னவென்று சோதித்துப் பார்த்ததில்லை. அதை சோதிக்க வேண்டுமானால், தேர்தலில் போட்டியிட வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் போட்டியிட்டால்தான் எங்களின் முழு பலம் என்னவென்று தெரியவரும். அந்த காரணத்துக்காகத் தான் தனித்துப் போட்டி என்று முடிவெடுத்துள்ளோம்' என்று விளக்கம் அளித்தார்.