எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து தான் முடிவெடுக்கவில்லை என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தங்களை 'நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்தக் கூடாது' என்றும் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகார வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கூறும்போது,
“ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் துப்பாக்கி முனையில் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? அவர்கள் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க விரும்பாத போது அவர்களை எப்படி கூட்டத்தில் பங்கேற்க வற்புறுத்த முடியும்.
சிலருடன் அமர்ந்து பேச நாங்கள் விரும்பாதபோது சபாநாயகர் தொடர்ந்து எங்களை நிர்பந்திக்கிறார். இந்த அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து அரசை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனே முடிவு எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை முடிவு எடுப்பார் என்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஏதேனும் தவறு செய்தால் உச்சநீதிமன்றம் தலையிடலாம் என்று அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. ஆளும் இந்த இரு கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல், 2 சுயேட்சை எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் வழங்கியுள்ளனர். எனினும், இந்த ராஜினாமா முடிவு குறித்து சபாநாயகர் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். இப்படிப்பட்ட அரசியல் குழப்பமான சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான பாஜக-வின் எடியூரப்பா, சட்டமன்றத்தில் ஆளுங்கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கோரினார்.
இதைத்தொடர்ந்து, நேற்று கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது, பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி நோட்டீஸ் சமர்பித்தது. தொடர்ந்து, ‘வரும் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை முடிவு எடுப்பார் என்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.