கும்பலைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்
ஹைலைட்ஸ்
- சர்ச்சைக்குரிய கருத்தினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் வன்முறை
- வன்முறையில், காவல்நிலையம், காங்கிரஸ் MLAவின் வீடு ஆகியவை தாக்கப்பட்டன
- போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்
Bengaluru: நாடு முழுவதும் கொரோனா தொற்றுடன் போராடிக்கொண்டிருக்கையில், சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் பெரும் கலவரம் ஒன்று அரங்கேறியுள்ளது. மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏவான சீனிவாஸ் மூர்த்தியுடன் நெருங்கிய உறவினர் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதன் காரணமாக இந்த வன்முறை வெடித்ததாக சொல்லப்படுகிறது.
பெங்களூரூவின் கே.ஜி.ஹல்லி மற்றும், டி.ஜே.ஹல்லி ஆகிய பகுதிகளில் வெடித்த வன்முறையில், ஒரு காவல் நிலையம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வீடு ஆகியவை தாக்கப்பட்டன. காவல் நிலையத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 200 பைக்குகள் தீக்கிரையாக்கப்பட்டன மற்றும் வன்முறையில் கட்டிடம் சேதமடைந்தது. கும்பலைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்தனர். பல காவல்துறையினர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறை திட்டமிடப்பட்டது என்றும், உத்தர பிரதேசத்தில் செய்தது போல குற்றவாளிகளிடமிருந்து சேதமடைந்த சொத்துகளுக்கான செலவுகளை அரசு மீட்டெடுக்கும் என பாஜக எம்.எல்.ஏ மாநில அமைச்சர் சி.டி.ரவி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், “கலவரம் திட்டமிடப்பட்டது. சொத்துக்களை அழிக்க பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்கள் பயன்படுத்தப்பட்டன. 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.” என ரவி தெரிவித்துள்ளார்.
வன்முறையின் தொடக்கம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், மாநிலத்தின் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் ஒரு அரசியல் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கலவரம் நடந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது.
முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் இன்று நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்தை சந்தித்து, சமூக ஊடக இடுகையைப் பற்றிய புகார்களில் காவல்துறையினர் மெதுவாக செயல்படுவதாக புகார் தெரிவித்தனர்.
இந்த கலவரத்தையொட்டி #CongressSupportsRiots என்ற ஹேஷ்டேக்கை பாஜக பயன்படுத்தி வருகின்றது. காங்கிரஸ் காவல்துறையை குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரசின் முன்னாள் முதல்வர் சித்தராமையா, "இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் சமாதானத்தை நிலைநாட்ட பாடுபட வேண்டும் என்று கூறிய எனது அறிக்கையை இந்து விரோதமாக சித்தரிக்க மக்கள் முயற்சிக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
“இதுபோன்ற சம்பவங்கள் இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்பதைக் குறிக்கிறது. உள்ளூர் பிரதிநிதிகளின் ஒற்றுமை மற்றும் மக்கள் அதிகாரத்திற்கான பசி காரணமாக மக்கள் விரக்தியின் வெடிப்புதான் இது” என மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் முதல்வர் எச் டி குமாரசாமி தெரிவித்துள்ளார்.