This Article is From Jan 04, 2020

''டெல்லி அரசின் திட்டங்களை நாங்களும் செயல்படுத்துவோம்'' - ஜார்க்கண்ட் முதல்வர் விருப்பம்!!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தலைநகர் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது டெல்லி ஆம் ஆத்மி அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

''டெல்லி அரசின் திட்டங்களை நாங்களும் செயல்படுத்துவோம்'' - ஜார்க்கண்ட் முதல்வர் விருப்பம்!!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த காட்சி.

Ranchi:

டெல்லி அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தனது மாநிலத்திலும் டெல்லி அரசின் மாதிரி திட்டங்களை கொண்டு வருவேன் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் பொறுப்பில் உள்ளார்.

அவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தலைநகர் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது ஆம் ஆத்மி அரசின் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் , 'டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு ஜார்க்கண்ட் மாநில மக்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவரை சந்தித்தபோது, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அந்த திட்டங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. அவற்றைப் போன்ற திட்டங்களை ஜார்க்கண்ட் மாநிலத்திலும் கொண்டு வர விரும்புகிறேன்' என்று ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக போராடியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான சிபு சோரனின் மகன்தான் இந்த ஹேமந்த் சோரன். அவர் கடந்த 2009-ல் இருந்து 2009 வரையில் அர்ஜுன் முண்டா முதல்வராக இருந்தபோது துணைமுதல்வர் பொறுப்பில் இருந்தார். அந்த நேரத்தில் ஹேமந்தின் கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளித்திருந்தது.

2013 ஜனவரியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பாஜகவுக்கு அளித்த ஆதரவை விலக்கியது. இதன்பின்னர் குடியரசு தலைவர் ஆட்சி மாநிலத்தில் கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டு ஜூலையில் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியைப் பிடித்து மிகவும் இளம் வயதில் (38) முதல்வரானவர் என்ற பெயரை பெற்றார்.

அவரது 17 மாத கால ஆட்சியில் ஹேமந்த் சோரன் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெண்களுக்கு அரசுப் பணிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு.,மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள சராண்டா, மேற்கு சிங்பூம் பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தியும், பாதுகாப்புகளை அதிகப்படுத்தியும் பிரச்னையை சிறப்பாக எதிர்கொண்டது உள்ளிட்டவை அடங்கும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மார்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றுள்ளார். 

.