ஊரடங்கு உத்தரவு குறித்து அரசு தரப்பு அறிவிக்கும் முன்னரே, பிரபல ஊடகங்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு...
ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது
- தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது
- தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாநிலத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்று சலசலக்கப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர், “மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை. முழு ஊரடங்கை அமல்படுத்த எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்கவில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதேபோல, இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து 5வது முறையாக தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. அதே நேரத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊரடங்கிற்கு ‘அன்லாக்' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முழு முடக்க நடவடிக்கையின் மூலம் போடப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாகத்தான் மால்கள் திறப்பது, வழிபாட்டுத் தலங்கள் திறப்பது, ஆட்டோக்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் மீண்டும் ஓட அனுமதிப்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள் மேலும் பல தளர்வுகள் அமலுக்கு வரும். அதே நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் தொடக்கத்திலிருந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல், மீண்டும் நாடு தழுவிய முழு முடக்க நடவடிக்கை அமல்படுத்தப்படும் என்ற தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. குறிப்பாக வட இந்தியவில் இந்தியில் பரவிய இச்செய்திக்கு, அங்கு செயல்படும் பிரபல ஊடகத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டது.
இதற்கு அதிகாரப்பூர்வ மறுப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு தரப்பு. மத்திய அரசின் ஊடகச் செய்திப் பிரிவான PIB Fact Check, பரப்பட்ட தகவலை முற்றிலும் போலியானது என்று உறுதிபட தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதலே, ஊரடங்கு உத்தரவு குறித்து அரசு தரப்பு அறிவிக்கும் முன்னரே, பிரபல ஊடகங்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு இப்படி வதந்திகள் பரப்பப்பட்டு வருவது தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஆனால், அப்படி பரவும் போலிச் செய்திகள் மற்றும் தகவல்களை பிஐபி ஃபேக்ட் செக் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக மறுத்து வருகிறது.