கல்வி அல்லது சுற்றுச் சூழல் துறை ஆதித்யாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mumbai: மகாராஷ்டிராவில் கொள்கையளவில் முரண்பட்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை நிறுவியுள்ளன. இது 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு சிவசேனாவின் இளம் தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான ஆதித்யா தாக்கரே பதில் அளித்திருக்கிறார்.
இன்றைக்கு அவருடைய தந்தையும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் இளம் அமைச்சர்களில் ஒருவராக ஆதித்யா தாக்கரே மாறியுள்ளார்.
5 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நீடிக்குமா என்று NDTV தரப்பில் கேள்வி கேட்கப்பட்டபோது,'எப்போதும் எளிமையாக இருப்பதும், மக்களின் கோரிக்கைகளை செவிகொடுத்து கேட்பதும் மிகவம் அவசியம்... எங்களை நம்பி வாக்களித்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இடத்தில் இருக்கிறோம்' என்று பதில் அளித்தார்.
சில வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்திருக்கின்றன. அதிகாலையில் அஜித் பவாருடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியை நிறுவியிருந்தது. அதனை வீழ்த்தி மகாராஷ்டிராவில் இந்த கூட்டணி அரசு நிறுவப்பட்டிருக்கிறது.
பாஜக தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைந்து 80 மணி நேரத்திற்கு பின்னர் முதல்வர் தேவந்திர பட்னாவீசும், துணை முதல்வர் அஜித் பவாரும் ராஜினாமா செய்தனர். உச்ச நீதிமன்றம் அளித்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உத்தரவு, அவர்கள் இருவரையும் ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளியது.
இன்றைக்கு அஜித் பவார் உத்தவ் தாக்கரே அரசில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் ஆதித்யா மற்றும் 34 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கான துறை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஆதித்யாவுக்கு கல்வித்துறை அல்லது சுற்றுச் சூழல் துறை ஒதுக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.
இதுபற்றி NDTVயிடம் கருத்து தெரிவித்த ஆதித்யா, 'என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது பற்றி நான் நினைக்கவில்லை. இதுபற்றி முதல்வரும், துணை முதல்வரும்தான் முடிவு எடுக்க வேண்டும்.
நான் அமைச்சராவேன் என்று முதல்வர் எண்ணிடம் ஏதும் சொல்லவில்லை. அதிகாரப்பூர்வ முறையில் விதிகளின்படியே என்னிடம் அமைச்சர் பதவி குறித்து தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி வீட்டிலும் யாருக்கும் தெரியாது.
அரசியல் என்பது மாறுபட்ட களம். குடும்பம் என்பது நமக்கு கலாசாரத்தை அளிப்பதாகும். எனவே குடும்பம், பெற்றோர், தாத்தா பாட்டிகளை மறக்கக் கூடாது' என்று பதில் அளித்தார்.
மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தனது தாயாரின் பெயரை ஆதித்யா தாக்கரே சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.