This Article is From Sep 17, 2019

இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அதிபர் Donald Trump

ஞாயிற்றுக் கிழமை, அமெரிக்காவின் டெக்சாஸுக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ‘ஹவுடி, மோடி’ என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்

இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களை விரைவில் சந்திப்பேன்: அதிபர் Donald Trump

இந்த மாத இறுதியில் நியூயார்க் நகரில், ஐ.நா சபைக் கூட்டம் நடக்க உள்ளது. அப்போது இம்ரான் கானை, ட்ரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

Washington:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், விரைவில் தான் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பிரதமர்களை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அவர் மேலும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலிருந்த பதற்ற சூழ்நிலை தணிந்துள்ளதாக கூறியுள்ளார். 

வரும் ஞாயிற்றுக் கிழமை, அமெரிக்காவின் டெக்சாஸுக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ‘ஹவுடி, மோடி' என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பங்கெடுக்க உள்ளார். இந்நிலையில் இரு நாட்டுப் பிரதமர்களை, அதிபர் ட்ரம்ப் எங்கு சந்திப்பார் என்பது குறித்த தகவலை தெரிவிக்கவில்லை. 

“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நான் விரைவில் சந்திக்க உள்ளேன். அதேபோல இந்திய பிரதமரையும் பார்ப்பேன். இரு நாட்டுக்கும் இடையில் தற்போது சூழல் நன்றாக முன்னேறியுள்ளது” என்று வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார் ட்ரம்ப். 

இந்த மாத இறுதியில் நியூயார்க் நகரில், ஐ.நா சபைக் கூட்டம் நடக்க உள்ளது. அப்போது இம்ரான் கானை, ட்ரம்ப் சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370, கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. அப்போதிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உரசல் போக்கு நிலவி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில், இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து வரும் பாகிஸ்தான், சர்வதேச அளவில் அந்தப் பிரச்னையை எழுப்ப முயன்று வருகிறது. 

‘ஹவுடி, மோடி' கூட்டத்தில், 50,000 இந்திய - அமெரிக்கர்கள் மத்தியில் ட்ரம்ப் பேசுவார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் பெருங்கூட்டத்தில் ட்ரம்ப், இப்படி உரையாற்ற உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் வரவுள்ளது என்பதை வைத்துப் பார்க்கும்போது, ட்ரம்பின் உரை கவனம் பெறுகிறது. 

.